நடிகை மீரா மிதுன் மற்றும் அவருடைய நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்த நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் ஷாம் அபிஷேக் மட்டுமே நேரில் ஆஜரானார். நடிகை மீரா மீதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவர் மீது பிடிவாரண்ட் விதிக்கப்பட்டது. இந்நிலையில் மீரா மிதுன் பெங்களூரில் இருப்பதாக கூறப்பட்டதால் காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆனால் மீரா மீதுன் அடிக்கடி தன்னுடைய இருப்பிடம் மற்றும் செல்போன் நம்பரை மாற்றிக் கொண்டே இருப்பதால் அவரை கைது செய்ய முடியவில்லை என காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீரா மிதுனை விரைவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என காவல்துறையினர் உறுதி கொடுத்த நிலையில், வழக்கு விசாரணையை நவம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில் மீரா மிதுனின் தாயார் சியாமளா திடீரென காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அதாவது தன்னுடைய மகள் வழக்கை சந்தித்த போதிலும் எங்களுடன் செல்போனில் தொடர்பில் இருந்தார். ஆனால் சில நாட்களாகவே செல்போனிலும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. எனவே எங்களுடைய மகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.