நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர் .இதனால் மக்களின் வசதிக்காக பல சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு திருச்சி மற்றும் அகமதாபாத் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து அக்டோபர் 27, நவம்பர் 3, 10, 17, 24ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் அடுத்த மூன்றாம் நாள் அதிகாலை 3.45 மணிக்கு திருச்சி சென்றடையும். பின்னர் திருச்சியில் இருந்து அக்டோபர் 30ஆம் தேதி, நவம்பர் 6, 13, 20,27 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் அடுத்த நாள் இரவு 9.15 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர்,விழுப்புரம் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுவதாகவும் இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.