காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டத்தில் இன்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், காருக்கான எரிப்பொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்ததில் இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையில் இறந்தவர் குறித்த எந்த விபரமும் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்தில் டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், ஈரோடு மாவட்ட எஸ்.பி. சசிமோகன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால், திருப்பூர், நாமக்கல், சேலம் ஆகிய அண்டை மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.