திருப்பதி கோயிலில் ரூபாய்.300 கட்டண டிக்கெட்டில் தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக ஒவ்வொரு மாதமும் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கொரோனாவுக்கு பின் தினசரி 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் அடிப்படையில் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு வந்தது. அத்துடன் ஆன்லைன் தரிசனம் டிக்கெட் இன்றி வரும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தினசரி 70 ஆயிரம் முதல் 85 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துகொண்டு செல்கின்றனர்.
ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்துக்கு போகும் பக்தர்கள் குறைந்தநேரத்தில் தரிசனம் செய்ய முடிவதால் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிலமணி நேரங்களிலே அனைத்து டிக்கெட்டுகளும் முன் பதிவு செய்யப்பட்டு விடுகிறது. இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வரும் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படுகிறது. தினசரி 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் விதமாக டிசம்பர் மாதத்திற்கு 10.50 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. இதேபோன்று மறுநாள் 27-ம் தேதி ஆன்லைன் வாயிலாக விடுதி அறைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.