புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகையே ‘கோவிட்-19’ எனப்படும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாக பரவி வருவதன் காரணமாக, யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி ‘உம்ரா’ (Umrah) வுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓராண்டில் ஒவ்வொரு மாதமும், உம்ரா செய்வதற்காக உலக நாடுகளில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்குச் செல்வது வழக்கமான ஓன்று.
ஆனால் கொரோனாவின் அச்சுறுத்தலால் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குவைத் மற்றும் பஹ்ரேன் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ளவர்களும் கொரோனா வைரஸ் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.