ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கிடைத்துள்ள 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்குவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அண்மையில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் காருக்குள் உட்கார்ந்து கொண்டு அவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ் (Quaden) கதறி அழுது கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறுகிறார். தனது மகனை சமாதானப்படுத்த தாயும் அழுது கொண்டே எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனாலும் அந்த சிறுவன் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருக்கிறான்.
இந்த சிறுவன் தலை பெரியதாகவும், கை, கால்கள் வளர்ச்சி குன்றி காணப்படுகிறான். இதனால் தன்னை பள்ளியில் இருக்கின்ற அனைவருமே கேலியும் கிண்டலும் செய்தது மட்டுமில்லாமல் கொடுமைப்படுத்துவதாக கூறி அந்த சிறுவன் கதறும் வீடியோ உலகையே உலுக்கியது. இந்த வீடியோவை பார்த்த லட்சக்கணக்கானோர் #TeamQuaden என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சிறுவனுக்கு ஆதரவாக ஊக்கமூட்டும் விதமாக தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் கருத்து பதிவிட்டனர்.
இந்த சிறுவனுக்காக அமெரிக்க நடிகர் ப்ராட் வில்லியம்ஸ் (brad Williams) உருவாக்கிய பக்கத்தின் மூலம் 4 லட்சத்து 75 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் 3 கோடியே 40 லட்சம் ரூபாய்) நன்கொடை வசூலிக்கப்பட்டது.
இந்த நிதி குவாடன் மற்றும் அவனது தாயையும் ‘டிஸ்னிலாண்ட்’ அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த நிதியை அவனது தாயார், நாங்கள் அங்கு செல்லமாட்டோம் என்று கூறி, பணத்தின் தேவை அதிகம் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.