சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரசு பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அண்ணா சதுக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் தீவுதிடல் நிறுத்தத்தில் இறங்குவதற்கு டிக்கெட் எடுத்துள்ளார். ஆனால் அந்த நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் போர் நினைவு சின்னம் அருகே சிக்னலில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த பயணியை கீழே இறங்கச் சொன்னதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த பயணி பேருந்து ஓட்டுனர் மற்றும் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் அந்த பயணி பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை அடுத்து ஓட்டுனரும், கண்டக்டரும் அந்த பயணியை போலீசாரிடம் பிடித்து ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.