டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது.
ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், கல், செங்கல், பாட்டில்களை வீசியும் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் அழைக்கப்பட்டது.
மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறையில் ஒரு தலைமை காவலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. வன்முறை பாதித்த ஜாஃப்ராபாத் பகுதியில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டெல்லி கலவரம் குறித்து விசாரிக்க சிறப்பு இரண்டு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.