பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகள் ஆன்டிஸ் நிஜாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஜனவரி 8ஆம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதவியவர்கள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் என்.ஐ ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.ஐ வில்சனின் மூத்த மகள் ஆன்டிஸ் நிஜாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. வருவாய் துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையை கன்னியாகுமரி ஆட்சியர் மு. வடநெரே வழங்கினார்.