Categories
மாநில செய்திகள்

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தூத்துக்குடியில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பேரணி!

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவினர் சார்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி நடைபெற்று வருகிறது.

சிஏஏ சட்டத்தை எதிர்த்து நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக டெல்லி சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் கலவரத்தில் முடிந்துள்ளது. இந்த கலவரத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு அமைதியாக பெண்கள், இளைஞர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தூத்துக்குடியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் இன்று பேரணி நடத்தினர். தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணியில் அண்மையில் பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா எம்பி, தேசிய மகளிரணி செயலாளர் விக்டோரியா கவுரி, மாவட்டத் தலைவர்கள் பி.எம். பால்ராஜ், பி.ராமமூர்த்தி, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற பேரணியை வேம்படி இசக்கியம்மன் கோயில் அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் வாகனங்களில் ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்தனர். இதேபோல தேனியில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும் திமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடந்தது.

Categories

Tech |