கோவை அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவை உள்ளன. இவ்விடங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரம் டன் அளவிற்கு குப்பை சேகரிக்கப்பட்டு கோவை அருகே உள்ள வெள்ளலூரில் இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை உரமாக மாற்றப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்றைய தினமும் தீவிபத்து பெருமளவில் ஏற்பட்டது. இதில், தீ மளமளவென எரிந்து குப்பைக்கிடங்கு முழுவதும் பரவி வந்தது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் தீயின் காரணமாக புகை தற்போது வரை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
பின் இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் தனி அதிகாரி ஒருவரை அனுப்பி வைத்தனர். அந்த வகையில் குப்பையில் அடிக்கடி தீ பற்றி எரிந்து வருகிறது. இது விபத்தா ?அல்லது யாரேனும் பற்ற வைக்கிறார்களா ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.