இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து துறைகளிலும் தூய்மை இயக்கம் நடைபெற்று வருகிறது. கடந்த 2-ம் தேதி தொடங்கிய தூய்மை இயக்கம் வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தூய்மை இயக்கத்தின் முக்கிய பகுதியாக கழிவுப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. அதோடு விதிமுறைகள் எளிதாக்கப்படுவதோடு கோப்புகளை ஆய்வு செய்து தேவையற்றதை நீக்கியும் வருகின்றனர். இப்படி தேவையற்ற கோப்புகளை நீக்குவதன் மூலம் இடமும் சேமிக்கப்படுகிறது. அதன்பிறகு கழிவுப்பொருட்கள் விற்பனையின் மூலம் பல கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. அதன்படி 254.21 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.
இதனையடுத்து 588 விதிமுறைகள் சுலபமாக்கப்பட்டதுடன், 3 லட்சத்து 20 ஆயிரத்து 152 மக்கள் குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளார். இந்நிலையில் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக டெல்லி உட்பட நாடு முழுவதும் 294 இடங்களில் துய்மைப் பணிகள் நடைபெற்று வருவதோடு, பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது 850 பைல்கள் ஆய்வு செய்யப்பட்டு 322 பைல்கள் நீக்கப்பட்டுள்ளதோடு, 75,145 சதுர அடி இடமும் காலியாகி இருக்கிறது. மேலும் கழிவு பொருட்கள் விற்பனையின் மூலம் 10 கோடியே 72 லட்சத்து 960 ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. மேற்கண்ட தகவல்களை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.