அதிக வேதிப் பொருள்கள் கலந்து இருப்பதால் மிகப் பிரபலமான டவ் உள்ளிட்ட உலர்ரக ஷாம்புகளை திரும்பப்பெற யூனிலிவர் நிறுவனம் முடிவுசெய்து இருப்பதாக கூறப்படுகிறது. பல உலகநாடுகளில் பயன்படுத்தப்படும் டவ், டிரஸ்ஸம்மே, டிகி உள்ளிட்ட உலர் ரக ஷாம்புகளில் அதிக வேதிப்பொருள் கலந்து இருப்பதாகவும், அதை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. ஆகவே அக்டோபர் 2021ம் வருடத்திற்குள் தயாரிக்கப்பட்ட டவ், நெக்ஸஸ், டிரெஸ்ஸம்மே, டிகி உள்ளிட்ட சந்தைப் பெயர்களைக் கொண்ட உலர்ரக ஷாம்புகளை, சந்தையில் இருந்து யூனிலிவர் நிறுவனம் திரும்பப்பெற முடிவு செய்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முன்பே உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டுவந்த ஜான்ஸன் ஜான்ஸன் நிறுவனத் தயாரிப்புப் பொருள்கள் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில், தற்போது மிகப்பிரபலமான அதிகம் விற்பனையாகும் ஷாம்புகளைப் பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளதாக கூறி சந்தையில் இருந்து அப்பொருள்கள் திரும்பப்பெறப்படுவது வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே சமயம் தயாரிப்பு நிறுவனமே திரும்பப்பெறுவதாக அறிவித்திருக்கும் இந்த வகை ஷாம்புகள் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இ-வர்த்தக இணையதளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் இந்நிறுவனம் உலர்ரக ஷாம்புகளை மட்டுமே திரும்பப்பெறுவதாகவும் சாதாரணவகை ஷாம்புகள் அல்ல எனவும் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.