நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. ஜெயலலிதா மறைந்து சில காலங்களிலேயே அவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த எஸ்டேட்டில் பணியாற்றிய காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், சில முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப் பட்டது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரும் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு திருப்பு முனைகள் அரங்கேறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆமை வேகத்தில் நடைபெற்ற விசாரணை தற்போது திமுக ஆட்சி காலத்தில் மின்னல் வேகத்தில் நடைபெற தொடங்கியுள்ளது. கடந்த வருடம் காவல்துறை சார்பில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை தேவை என ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டதால் ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 316 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
செப்டம்பர் மாதம் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 316 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் தலைமையில் ஒரு குழு நேற்று கொடநாடு பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இவர்கள் கொலை நடந்த அன்று பணியில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்துவதோடு, அங்கேயே தங்கி இருந்து விசாரணையை தீவிரப் படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.