Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SAvBAN : சிக்ஸர் மழை…. ரூஸோவ் அதிரடி சதம்…. வெளுத்தெடுத்த டி காக்…. வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு.!!

வங்கதேச அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது.

டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் காலை 8:30 மணிக்கு மேல் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா பவுமா மற்றும் குயிண்டன் டி காக் இருவரும் களமிறங்கினர்..

இதில் பவுமா 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரூஸோவ் மற்றும் டிகாக் இருவரும் ஜோடி சேர்ந்து வங்கதேச பந்துவீச்சாளர்களை  வெளுத்து வாங்கினர். இதனால் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் ரன்ரேட் சென்று கொண்டே இருந்தது. இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களுக்கு மேல் கடந்து சென்றது. இருவரும் அரைசதம் அடித்திருந்த நிலையில், 15 வது ஓவரில் 38 பந்துகளில் (7 பவுண்டரி, 3 சிக்சர்) 63 ரன்கள் எடுத்திருந்த டி காக் அவுட் ஆனார்.

அப்போது தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் 14.3 ஓவரில் 170/2 என்று இருந்தது. அதன்பின் ரூஸோவ் தனது இரண்டாவது டி20சதத்தை பதிவு செய்தார். இதனால் எப்படியும் தென் ஆப்பிரிக்கா அணி 230 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததே வேறு.. அதன் பின் வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17ஆவது ஓவரில் 7 ரன்னில் அவுட் ஆக, சதம் விளாசிய ரீலி ரூஸோவ் 56 பந்துகளில் 109 ரன்கள் (7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள்) எடுத்த நிலையில் 19 ஆவது ஓவரில் அவுட் ஆனார். எதிர்பார்க்கப்பட்ட எய்டன் மார்க்ரம் 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட் ஆனார்.

இதனால் ரன் ரேட் குறைந்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. டேவிட் மில்லர் 2 ரன்களிலும், பார்னெல் 0 ரன்னிலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் ஹசன் 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது வங்காளதேச அணி களம் இறங்கி ஆடி வருகிறது.

Categories

Tech |