சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகளை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் தல்லாக்குடி பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இவர் திருச்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளக்குடிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அவர் தல்லாக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் தெரஸ் ராஜாமணியிடம் “உங்களுடைய மகளும் பேரனும் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறி மூதாட்டியை ஏமாற்றி காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.
சிறிது தூரம் சென்ற பிறகு மர்ம நபர்கள் காரில் இருந்த மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த சங்கிலி, வளையல், தோடு உள்ளிட்ட நகைகளை பறித்துக் கொண்டனர். பின்னர் மர்மநபர்கள் மூதாட்டியை கொள்ளிடம் ஆற்றங்கரையில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரஸ் ராஜாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.