தேனி மாவட்டத்தில் மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவராக பார்வதி அன்பில் சுந்தரம் இருந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று இரவு மர்ம கும்பல் ஒன்று ஊராட்சி மன்ற அலுவலர் கதவை உடைத்து உள்ளே புகுந்து மேசை நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து நேற்று காலை வழக்கம் போல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தரம் சென்றுள்ளார்.
அப்போது அவர் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததையும் மேசை நாற்காலிகள் உடைந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் மயிலாடும்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து “யார் இவ்வாறு செய்தது?. இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கின்றதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள 15 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.