தேனி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகிற 1 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து தேனி மாவட்டத்தின் கலெக்டரான முரளிதரன் செய்தி குறிப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்புக்காக மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி வைத்துள்ளார். இதுவரை இந்தத் திட்டத்தில் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். தற்போது முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு இந்த திட்டத்தில் பயன்பெறும் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக இந்த வலைதளத்தில் மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக வருகிற 1 தேதி முதல் 11ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் மட்டுமே திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்றும் மாணவிகள் தங்களுடைய கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே இந்த திட்டத்தை விண்ணப்பிக்க முடியும். மேலும் இதில் பதியும்போது மாணவிகள் தவறாமல் தங்களுடைய ஆதார் கார்டு மற்றும் மாற்று சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தற்போது 2,3 மற்றும் 4 ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறி இருந்தால் அவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.
இதனையடுத்து புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகளுக்கு கல்வி பயிலும் நிறுவனங்களில் வருகின்ற 11ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சமூக நல இயக்குனரக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை பின்வரும் தொலைபேசி எண்களில் அணுகி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்” என அதில் கூறப்பட்டுள்ளது.