ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் வருடம் தோறும் முத்துராமலிங்க தேவருக்கு அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக கட்சியின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு 4.5 கோடி மதிப்பிலான, 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது வருடம் தோறும் அதிமுக கட்சியின் சார்பில் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து எடுத்து தேவர் சிலைக்கு அணிவிப்பார். கடந்த வருடம் வரை ஓபிஎஸ் தான் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு தங்க கவசத்தை அணிவித்து வந்தார்.
ஆனால் தற்போது அதிமுக கட்சியில் உட்பட்சி பூசல்கள் அதிகரித்ததால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தேவர் தங்க கவசத்தை அணிவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தங்கக் கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கூறியதோடு, தேவர் ஜெயந்தி விழாவின்போது வருவாய் துறை அதிகாரி வங்கியில் இருந்து தங்க கவசத்தை எடுத்து சிலைக்கு அணிவித்து விட்டு மீண்டும் பத்திரமாக வங்கியில் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதனால் திமுக ஆட்சியின் கைவசம் தற்போது தங்க கவசம் இருக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற போது துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இருந்தார். அப்போது ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்ததால் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதிவிகள் உருவாக்கப்பட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்-ம் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடியும் நியமிக்கப்பட்டனர். கடந்த 2017-ம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவின்போது கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் தங்க கவசத்திற்கு உரிமை கோரினார்.
ஆனால் நிலுவையில் இருந்த வழக்கை காரணம் காட்டி டிடிவி தினகரன் எங்களுக்கு தான் தங்க கவசத்தை அணிவிக்கும் உரிமை இருக்கிறது என்று கூறினார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி வருவாய் துறை அதிகாரி கவசத்தை தேவர் சிலைக்கு அனுவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த சமயத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது ஓரளவு ஆறுதலாக அமைந்தது. ஆனால் தற்போது திமுகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும் இப்படிப்பட்ட சமயத்தில் தங்க கவசமானது அதிமுகவின் வசம் வராதது பற்றி எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் கண்டிப்பாக யோசனை செய்ய வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.