கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலையில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்த காருக்குள் இருந்த மூபின் என்பவர் உடல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து 76 கிலோவுக்கு மேல் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை சம்பவம் பெரிதாக பீதியை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார் . இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான ஃபெரோஸ், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களுடன் சந்தித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 2019ல் இலங்கை தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த ரஷித் அலி, முகமது அசாருதீன் உள்ளிட்டோரை என்ஐஏ கைது செய்தது. தற்போது கேரளாவின் வியூர் சிறையில் இருக்கும் அவர்களை சமீபத்தில் சந்தித்ததாக ஃபெரோஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.