சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருவதை அந்த நாட்டு அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் புதிதாக திருமணமானவர்களின் விவரங்களை சேகரித்து அந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து இருக்கிறதா என்பதை அரசு தீவிரமாக கண்காணித்து வருகின்றது. சமீபத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கியமான கூட்டத்தில் பேசிய அந்த கட்சி தலைவரும் அந்த நாட்டின் அதிபருமான ஜின்பிங் பேசும்போது சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் நாட்டின் மக்கள் தொகை மேம்பாட்டு திட்டத்தை மேம்படுத்துவதற்கும் நாடு ஒரு கொள்கையை நிறுவும் என தெரிவித்துள்ளார்.
அதாவது புதிதாக திருமணமான ஒரு பெண் இது பற்றி தனது அனுபவத்தை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பதிவிட்டு இருப்பதாவது, திருமணமான பின் நான் கர்ப்பமாக இருக்கிறேனோ என்று உள்ளூர் அதிகாரிகள் என்னிடம் தொடர்பு கொண்டு விவரம் கேட்கின்றார்கள் என கூறியுள்ளார். இந்த தகவலை அவர் பகிர்ந்து கொண்ட சில நிமிடங்களில் பலரும் தங்கள் இதுபோல அணுகுமுறையால் பாதிக்கப்பட்டிருப்பதாக இணையத்தில் தெரிவித்து இருக்கின்றனர் இதனை அடுத்து அந்த ஆன்லைன் பதிவு அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு பெண்மணி பேசும்போது கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் எனக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் நீங்கள் திருமணம் ஆனவர் நீங்கள் ஏன் இன்னும் கர்ப்பத்திற்கு தயாராகவில்லை என அதிகாரிகள் என்னிடம் விசாரித்துள்ளனர் எனக் கூறியுள்ளார். மற்றொருவர் பேசும்போது நான்கு நகர அரசு பெண்கள் சுகாதார சேவை மைய அதிகாரிகள் என்னிடம் இரண்டு முறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுமண தம்பதிகள் ஒரு வருடத்திற்குள் கர்ப்பமாக இருக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது என ஒரு அதிகாரி என்னிடம் தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார்.