முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது என தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பதிலளித்துள்ளது.
தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமற்றது எனவும், இரண்டாம் சுரங்க பாதை அமைப்பதால் அணையின் கொள்ளளவை தற்போதுள்ள நிலையிலிருந்து 152 அடிக்கு உயர்த்த முடியாது என தங்களுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது. எந்த வழக்கில் தமிழக அரசு இந்த பதிலை அளித்துள்ளது என்றால், மதுரையை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் மே மாதம் 7ஆம் தேதி 2014 அன்று நீதிமன்றம் பெரியார் அணையில் 142 அடியாக அந்த கொள்ளளவை உயர்த்தி கொள்ளலாம் எனவும், அணையை ஒட்டி உள்ள பேபி அணையை பலப்படுத்திய பின் முழு கொள்ளளவான 152 அடிக்கு நீரை தேக்கி கொள்ளலாம் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது. எனவே தமிழக பகுதிக்கு மேலும் ஒரு சுரங்க பாதை அமைத்து இதைவிட அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டால், அந்த வீணாக செல்லக்கூடிய தண்ணீரை கேரளா பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். முல்லை பெரியார் அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர உத்தரவிட வேண்டும் எனவும் தன்னுடைய மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தான் தமிழக அரசு தரப்பில், அந்த புதிய அணை கட்டுவது சாத்திய மற்றதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவின் படி முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவில் தமிழக, கேரளா அரசின் சார்பில் தலா ஒருவர் என 2 தொழில்நுட்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டு முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் சுரங்கப்பாதை அமைக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை, நிபுணர்கள் குழுவில் உள்ள கேரளா பிரதிநிதி தான் இந்த கருத்தை கூறியுள்ளார்.
இதனை ஏற்க முடியாது என தமிழக பிரதிநிதி கூறிவிட்டார் எனவும், இரண்டாம் சுரங்கப்பாதை அமைப்பதால் அணையின் கொள்ளளவை தற்போதுள்ள நிலையில் இருந்து 152 அடிக்கு உயர்த்த முடியாது. அணையை பலப்படுத்தி 152 அடிக்கு தண்ணீர் தேக்குவது மட்டும் தான் தமிழக அரசின் நோக்கம், முல்லைப் பெரியாறு அணையினுடைய சேமிப்பு தன்மை அதிகரிக்கவும், வைகை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை முறையாக பயன்படுத்தவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதிகள் பதில் மனுவை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.