தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பொதுவாக மழைக் காலங்கள் என்றாலே சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை தொடங்கியது. சில இடங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிவு பெற்றாலும் பல இடங்களில் பணிகள் பாதியிலேயே முடங்கி இருக்கிறது.
அதன் பிறகு சில இடங்களில் இப்போதுதான் குழி தோண்டி பணிகளை தொடங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் மழை நீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழுவில் செய்தியாளர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார்.
அதன்படி மாங்காடு, குன்றத்தூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தியதோடு பணிகள் எந்த அளவில் நடைபெறுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியதோடு, வெள்ள நீரால் பொதுமக்கள் பாதித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தார்.