சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையில் வசிக்கும் அமுத ராஜ் என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் கடந்த மாதம் திருடு போனது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அமுதராஜ் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து தேடி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளுக்கான அனைத்து நகல் ஆவணங்களும் அமுதராஜிடம் இருக்கிறது. ஆனால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமீர் அப்பாஸ் என்ற பெயருக்கு ஆர்.சி. புக் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அமுகராஜ் தனது மோட்டார் சைக்கிளை மீட்டு தருமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் அலுவலக பெண் உதவியாளர் மற்றும் பெண் கண்காணிப்பாளர் ஆகியோரின் அலட்சியத்தால் உரிய ஆவணங்கள் இன்றி ஆர்.சி புக் பெயர் மாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து பண்ருட்டி ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் ஆர்.சி புக் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் பெண் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை போக்குவரத்து கமிஷனர் அலுவலகத்தில் பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் இரண்டு பெண் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பண்ருட்டி ஓட்டுநர் பயிற்சி பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.