Categories
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத் தேவரின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! – முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்..

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, அன்பில் மகேஷ், மூர்த்தி, ஐ.பெரியசாமி, ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தேவரின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! “தென்னகத்து போஸ்” ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! என்று பதிவிட்டுள்ளார்..

முன்னதாக இன்றைய தினம் முதலமைச்சர் முக ஸ்டாலின் பசும்பொன் செல்வதாக திட்டமிடப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக நேற்றுமுன்தினம்  அவருக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவர் 2 மணி நேரம் பரிசோதனைக்கு பிறகு வீடு திரும்பினார். முதலமைச்சர் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும், நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருப்பதால் முதல்வர் பயணத்தை ரத்து செய்தார். தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர்.

Categories

Tech |