கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் சுஷ்மா(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுஷ்மாவுக்கு டெல்லியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சியாம்(28) என்பருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தலை தீபாவளி கொண்டாடுவதற்காக சுஷ்மா தனது கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று மதியம் கணவன் மனைவி இருவரும் காளிகேசம் பகுதியை சுற்றிப் பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இதனை அடுத்து இருவரும் காளிகேசம் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சுஷ்மா வெள்ளத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சியாம் தனது மனைவியை காப்பாற்ற முயன்ற போது சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.
கரையோரம் இருந்த செடிகளை பிடித்து சுஷ்மா அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சியாமின் சடலத்தை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.