பிரபலமான பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் 29-ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு வழக்கில் தொடர்புடைய தீபக் டினு, கபில் பண்டிட், ராஜீந்தர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 18-ஆம் தேதி கொலை வழக்கில் தொடர்புடைய பாடகர் ஜக்தர் சிங் மூஸா மற்றும் குற்றவாளிகளில் ஒருவரான தீபக்கின் காதலியான ஜீதிந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இப்படி பாடகர் கொலை வழக்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் சித்து மூஸ்வாலாவின் தந்தை பல்காவர் சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய மகனின் கொலை குறித்து பேசுவதற்காக டிஜிபியிடம் நேரம் கேட்டுள்ளேன்.
என்னுடைய மகனை திட்டமிட்டு கொலை செய்திருக்கும் நிலையில் காவல்துறையினர் அதை கோஷ்டி மோதல் போல் காண்பிக்க முயற்சி செய்கின்றனர். நான் ஒரு மாதம் வரை காத்திருப்பேன். மேலும் அதன் பிறகும் என்னுடைய மகனின் கொலை வழக்கில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்றால் எஃப்ஐஆர்-ஐ வாபஸ் செய்துவிட்டு நாட்டை விட்டே சென்று விடுவேன் என்று கவலையோடு கூறினார்.