ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது.
அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது. 5 கட்டங்களாக அடிக்கல் நாட்டும் பணிகளானது நடைபெறும் என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்ட மக்களின் 30 ஆண்டு கோரிக்கையை ஏற்று புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் ரூபாய் 345 கோடியில் மருத்துவக் கல்லூரி அமைகிறது. ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி கட்ட 22.6 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.