தமிழகத்தில் சிறப்பு திருமண பதிவுக்கு வருவோரில் ஒருவர் இந்தியராக இல்லாவிட்டாலும் மனுவை சார் பதிவாளர்கள் ஏற்க வேண்டும் என்று பதிவுத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் அவரவர் மத வழிமுறையின் படி திருமணம் செய்து அது குறித்த ஆதாரங்களை அளித்து பதிவு திருமணம் செய்து கொள்ளலாம்.ஜாதி மற்றும் மதம் கடந்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கு சிறப்பு திருமண பதிவு சட்டம் அமலாகியுள்ளது.
அதன்படி மணமக்கள் வெவ்வேறு மதம் மற்றும் சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பதிவுக்கு எந்த ஒரு தடையும் ஏற்படாது.திருமண பதிவுக்கு விண்ணப்பிக்கும் மணமக்களில் ஒருவர் இந்தியராகவும் மற்றவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தால் விண்ணப்பங்களை சார் பதிவாளர்கள் நிராகரித்து விடுகின்றனர்.
எனவே இனி சிறப்பு திருமண பதிவு சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள வருவோரில் ஒருவர் இந்தியராகவும் மற்றவர் இந்தியர் அல்லாதவராக இருந்தாலும் கூட அந்த திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றும் அதனை பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய காரணங்கள் இல்லாமல் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது.அப்படி நிராகரிப்பு குறித்து புகார் ஏதாவது வந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.