திண்டுக்கல் மாவட்டத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் அருண்குமார் என்பவர் கோவையில் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி ஆவணங்களை காண்பிக்குமாறு அருண்குமார் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் நைசாக அங்கிருந்து தப்பி ஓடி மாயமானார். மற்றொரு வாலிரும் ஓட்டம் பிடித்ததால் அருண்குமார் அவரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விடாமல் துரத்தி சென்று மடக்கி பிடித்தார்.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிள் போத்தனூரில் வசிக்கும் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பதும், பிடிபட்ட வாலிபர் காளப்பட்டியில் வசிக்கும் ரத்தீஷ் என்பதும் தெரியவந்தது. ரத்தீஷ் உட்பட மூன்று வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி வந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ரத்திஷைகைது செய்தனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாலிபரை துரத்தி சென்று பிடித்த சப்-இன்ஸ்பெக்டரை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.