கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கு மாவட்டச் செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ இல்லத்திருமணம் விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கும்போது, சட்டசபையில் தி.மு.க-வை யாராவது விமர்சித்து பேசினால் முதல் குரலாக உதயசூரியனின் குரல் இருக்கும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, உதயசூரியனுக்கு திருமணம் நடத்திவைத்தார்.
இப்போது அவருடைய மகன் பர்னாலாவுக்கு திருமணம் நடத்திவைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சென்ற 1990ஆம் வருடம் அப்போதைய ஜனாதிபதி வெங்கட்ராமன், கவர்னர் பர்னாலாவை அழைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் கூறி திமுக ஆட்சியை கலைக்குமாறு தெரிவித்தார். எனினும் தன்னால் இயலாது என பர்னாலா கூறி விட்டார்.
அதன்பின் கள்ளக்குறிச்சிக்கு கருணாநிதி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது திமுக மீதான பற்று காரணமாக, மறைந்த தலைவர் கருணாநிதியிடம் தன் மகனை கொடுத்து, பர்னாலா என பெயர் சூட்டுமாறு தெரிவித்தார். மணமக்கள் வளமுடன் வாழவேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்று கூறமாட்டேன். ஆனால் எப்படி வாழக்கூடாது எனில், இபிஎஸ்-ஓ.பி.எஸ் போல் வாழக்கூடாது. மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்று பேசினார்.