சாலிகிராமத்தில் பிரபல இயக்குனரின் கார் கண்ணாடி கல்லால் உடைக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனரும் நடிகை ரோஜாவின் கணவருமான ஆர்.கே.செல்வமணி திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் பெப்சி சங்கத்தின் தலைவராகவும் இருக்கின்றார். இவரின் வீடு சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் இருக்கின்றது. நேற்று முன்தினம் மாலையில் இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சாலிகிராமத்தில் இருக்கும் கண்ணம்மாள் தெருவிற்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் சாலையோரமாக காரை நிறுத்தி இருக்கின்றார்.
பின் அவர் நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கல்லால் காரின் கண்ணாடியை உடைத்தது தெரிய வந்தது. இது குறித்த ஆர்.கே.செல்வமணியின் டிரைவர் பாலமுருகன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.