புதுடெல்லியில் உள்ள பூங்காக்களில் இலவசமாக பொதுமக்களின் நலனுக்காக யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தினால் சுமார் 17,000 பேர் பயன் அடைந்து வந்தனர். ஆனால் கடந்த 31-ம் தேதிக்கு பிறகு யோகா பயிற்சிகளை தொடர்ந்து நடத்துவதற்கு ஆளுநரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக துணை முதல்வர் மணிஸ் சிசோடியா துணைநிலை ஆளுநர் வி.கே சக்சேனாவை நேரில் சந்தித்து திட்டத்தை நீட்டிப்பது தொடர்பாக பேசியுள்ளார்.
ஆனால் ஆளுநர் மாளிகையில் இருந்து டெல்லி அரசின் சார்பில் கடிதம் மட்டுமே வந்துள்ளது. உரிய முறையில் கோப்புகள் தரவில்லை. கோப்புகள் இல்லாமல் எப்படி அனுமதி வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் யோக சாலை மையங்களை பாஜக அரசு முடக்குவதற்கு திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், இன்று முதல் யோகா பயிற்சி நிறுத்தப்படுவதாக துணை முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இதனால் பூங்காக்களில் இலவசமாக யோகா பயிற்சி பெற்றவர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கின்றனர்.