கர்நாடகா மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வந்தது.
மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்து ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்தும், பரிசலில் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.