கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார் இவர் பவர் ஸ்டார், அப்பு என்று அழைக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் மரணம் திரை உலகையை துக்கத்தில் ஆழ்த்தியது. இவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது, வறுமையில் உள்ளவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என்று பல்வேறு சமூக பணிகளையும் மேற்கொண்டு வந்தார். தற்போது புனித் ராஜ்குமாரின் மறைவிற்கு பிறகு அவரது பெயரால் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த நடிகர் புனித ராஜ்குமார் கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூரில் இன்று மாலை 4 மணிக்கு விதான சவுதாவின் முன் பகுதி படிக்கட்டுகளில் நடக்க உள்ளது.
இந்த விழாவில் அஸ்வினி புனித் ராஜ்குமார் இடம் கர்நாடக ரத்னா விருதை முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்குகிறார். இந்த விழாவில் கவுரவ விருந்தினர்களாக கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரி, மேல்-சபை தலைவர் ரகுநாத் மல்காபுரே கலந்து கொள்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர்., இன்போசிஸ் அறக்கட்டளை தலைவி சுதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். விழாவில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், கன்னட வளர்ச்சித்துறை மந்திரி சுனில்குமார், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், பி.சி.மோகன் எம்.பி., ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.