முன் பதிவு செய்த ரயில் டிக்கெட்டைத் தொலைத்து விட்டால் என்ன செய்வது..? பயணம் செய்தே தீரவேண்டும், பணமும் செலவழிக்க முடியாது? என்ற நிலையிலும் கூட பயணத்தைத் திட்டமிட்டபடி தொடருவதற்கான மாற்றுவழிகள் இருக்கத்தான் செய்கிறது. ரயில்வே உடைய அதிகாரபூர்வமான இணையமான irctc.co.in எனும் இணையதளத்தில் முன் பதிவு செய்தோ (அ) நேரடியாக டிக்கெட் பெற்றோ ரயிலில் பயணிக்கலாம். எனினும் ஆன்லைன் வசதி இருந்தும் இன்னும் ஏராளமான மக்கள் நேரில்சென்று டிக்கெட்டை முன் பதிவு செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டு இருக்கின்றனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கவேண்டும் எனில், பயண நேரத்துக்குச் சற்று முன்னர் நேரடியாக சென்று கவுன்டரில் டிக்கெட் வாங்கிக்கொண்டால் போதுமானது ஆகும். நேரடியாக பெற்ற டிக்கெட்டை பயணம் முடியும் வரையிலும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்.
ஆன்லைன் மூலம் டிக்கெட் முன் பதிவு செய்தவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. எந்த நேரமும் ஆன்லைனில் ஐஆர்சிடிசி இணையதளத்திற்குள் லாக்-இன் செய்து தங்களுடைய டிக்கெட்டைக் காட்டலாம். இன்னும் கூறபோனால், பெரும்பாலும் டிக்கெட்டைக் கூட காட்டத்தேவையில்லை. அதாவது ஏதேனும் ஓர் அடையாள அட்டையை மட்டும் காட்டினால் போதுமானது ஆகும். ரயில் டிக்கெட் தொலைந்துபோனால் பதற்றம் அடைய தேவையில்லை. ஏனெனில் டிக்கெட்டைப் பெற்று பயணம் மேற்கொள்வதற்கு மாற்றுவழி உள்ளது. பயணத்துக்கு முன்பு உறுதிசெய்யப்பட்ட (அ) ஆர்ஏசி ரயில் டிக்கெட்டை நீங்கள் தவறவிட்டால் (அ) தொலைந்து விட்டால் “டியூப்ளிகேட் டிக்கெட்” எனும் டிக்கெட் நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பாக ரயில்நிலைய முன் பதிவு கவுன்டரில் தகவலளித்து, டிக்கெட் முன் பதிவு செய்யும்போது பயன்படுத்திய அடையாளச் சான்றைக் காட்டவேண்டும். அதனடிப்படையில் உங்களுக்கு டிக்கெட் நகலானது வழங்கப்படும். ரயில்வே பயணத்துக்கான “சார்ட்” தயாராவதற்கு முன்பு நீங்கள் டிக்கெட் நகலைப் பெற்றால், முன்பதிவு இல்லாத, இரண்டாம் தரவகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு டிக்கெட் எனில் ரூபாய். 50 செலுத்தவேண்டும். இதர வகுப்பு டிக்கெட்டுக்கு ரூபாய்.100 செலுத்தவேண்டும். ஒரு வேளை “சார்ட்” தயார் ஆனதற்குப் பிறகு டிக்கெட் தொலைந்தது தெரிந்தால், உங்களது பயணக் கட்டணத்தில் 50 சதவீத தொகையை செலுத்தினால் மட்டுமே டிக்கெட் நகல் பெறமுடியும்.
கிழிந்த (அ) சேதமடைந்த டிக்கெட் எனில் நகல் டிக்கெட்டுகளுக்கு 25 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும். அதுபோன்று காத்திருப்போர் பட்டியலிலுள்ள கிழிந்த (அ) சேதமடைந்த டிக்கெட்டுகளுக்கு நகல் கிடைக்காது. ஆர்ஏசி டிக்கெட்டாக இருப்பின் சார்ட் தயாரானதற்கு பிறகு டிக்கெட் நகல் பெறமுடியாது. ஒரு வேளை டிக்கெட் நகல் பெற்றபின் உங்களுக்கு ஒரிஜினல் டிக்கெட் கிடைத்தால் ரயில் புறப்படுவதற்கு முன்பாக 2 டிக்கெட்டையும் சமர்ப்பித்தால் டிக்கெட் நகலுக்காக நீங்கள் செலுத்திய கட்டணத்தில் 5 சதவீதம் (அ) ரூ. 20 பிடித்தம் செய்துவிட்டு கட்டணத்தைத் திரும்பப்பெறலாம்.