கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை சந்திப்பிலிருந்து மடிச்சல் செல்லும் சாலை சுமார் 100 மீட்டர் தூரம் சேதமடைந்து குண்டும், குழியுமாக இருக்கிறது. இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. இதனால் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மடிச்சல் பகுதியில் வசிக்கும் மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞரான புனித தேவகுமார் என்பவர் சமூக வலைதளங்களில் சாலையை சீரமைக்காவிட்டால் 31-ஆம் தேதி குழித்துறை சந்திப்பில் தீக்குளிப்பேன் என பதிவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் போதிய நிதி இல்லாததால் சாலை சீரமைக்க முடியவில்லை, விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனை ஏற்றுக் கொள்ளாத புனித தேவகுமார் நேற்று காலை குழித்துறை சந்திப்பு பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்துள்ளார். இதனை பார்த்த போலீசார் உடனடியாக அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அளித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.