உலகளவில், கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவின் வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 2,870 பேர் உயிர் இழந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையுடன் சேர்த்து மொத்தம் 3,001 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று, ஒரே நாளில் மட்டும் ஈரான் நாட்டில் 11 பேர் உட்பட 24 பேர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர்.
67 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்ட 88, 375 பேரில் 7, 608 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். இந்தநிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு போதுமான மருத்துவ உதவிகளை வழங்கவும், வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு போதுமான ஆலோசனைகளை வழங்கவும் சீனா முன்வந்துள்ளது.
இதற்காக சீனா தனது மருத்துவ நிபுணர்களின் குழுவை ஈரானுக்கு அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் மரணத்தைத் தடுப்பது குறித்து இந்த மருத்துவர்கள் குழு ஈரான் மருத்துவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.