சென்னை அருகே பாலியல், பண மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்து மகாசபை தலைவர் ஸ்ரீகண்டன் நேற்று இரவு தனிப்படை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நிரஞ்சனி என்பவர் இந்து மகாசபை தலைவரான ஸ்ரீகண்டன் என்பவர் மீது கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னை இழிவு படுத்தியும், கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் மீது பாலியல் சீண்டல், கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் முன் ஜாமீன் பெற்று வெளியில் சுற்றித் திரிந்து வந்தார். இவ்வாறு இருக்கையில் வில்சன் என்பவர் ஸ்ரீகண்டன் தன்னை பண மோசடி செய்து விட்டதாக கூறி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில்,
ஸ்ரீகண்டன் தன்னிடம் சில மாதங்களுக்கு முன்பு பண மோசடியில் ஈடுபட்டதாகவும், இழந்த பணத்தை திருப்பி கேட்க சென்றபோது ஆட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதையடுத்து அவர் மீது மோசடி, பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தேடி வர அவர் தலைமறைவானார். இந்நிலையில் தலைமறைவான அவரை கோடம்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகள் நேற்று இரவு அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.