குடிபோதையில் மோட்டார் சைக்கிள்களை எரித்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு மாலைகோவில் தெருவில் மின்வாரிய ஊழியரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பூண்டு வியாபாரியான கோபால் என்பவரும் வசித்து வருகிறார். இருவரும் அவரவர் வீட்டிற்கு முன்பு மொபட்டை நிறுத்தியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு சென்றார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதே போல் கல்லூரி பேராசிரியரான கார்த்திக், அரசு பள்ளி ஆசிரியரான சௌந்தரராஜன், வியாபாரியான சின்ராஜ், பால் வியாபாரியான முருகன், வேன் ஓட்டுனரான ராஜா, கூலி தொழிலாளி மணிகண்டன், சக்திவேல் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்களும் அடுத்தடுத்து தீ வைத்து எரிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருந்தனர். இதனால் பொதுமக்கள் வீட்டு முன்பு வாகனங்களை நிறுத்துவதற்கு மிகவும் அச்சப்பட்டனர்.
இந்நிலையில் மர்ம நபரை பிடிப்பது போலீசாருக்கு சவாலாக இருந்தது. ஏனெனில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அவரது உருவம் பதிவாகவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் மாலைகோவில் தெருவில் இருந்து கரூர் சாலைக்கு செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் தச்சு தொழிலாளியான மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் தச்சு வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மணிகண்டன் மது வாங்கி குடித்துள்ளார். பின்னர் போதை தலைக்கேறியதும் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கும் செயலை வழக்கமாக கொண்டுள்ளார். போதை அதிகமானதும் என்ன செய்கிறோம் என்பது தெரியாத அளவிற்கு மணிகண்டன் இருந்ததாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரை நீதிமன்றத்தில் போலீசார் சிறையில் அடைத்தனர்.