அவாஹில் ராணுவ முகாமில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி நடைபெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் ஆண்டுதோறும் தேசிய மாணவர் படை(என்.சி.சி) மாணவர்களுக்கு மலை ஏறும் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று காரணமாக பயிற்சி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு வெலிங்டனில் உள்ள அவாஹில் ராணுவ முகாமில் தேசிய மாணவர் படையில் உள்ள மாணவிகளுக்கு மலையேற்ற பயிற்சி நடைபெற்றுள்ளது.
இதில் முதல்கட்ட பயிற்சியாக அவாஹில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் உள்ள சிம்ஸ் பூங்கா வரை பயிற்சி அளிக்கப்பட்டது. இதனையடுத்து 2 ஆம் கட்ட பயிற்சியாக சேலாசில் இருந்து பக்காசுரம் மலை வரையிலும், பின்பு உபதலையில் இருந்து கேத்தொரை வழியாக பழத்தோட்டம் வரையிலும், இறுதியாக முத்தோரை பாலாடாவில் இருந்து முத்தநாடுமந்து வரை என 3 இடங்களில் நடைபெற்றுள்ளது. மேலும் பயிற்சி முடியும் போது மாணவிகள் பழங்குடியின கிராமம் மற்றும் அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டு பழங்குடியின மக்களின் பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் முறை குறித்து அறிந்து கொண்டுள்ளனர்.