ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றே வெளியிட்டு உள்ளார். அதில், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக அந்த திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரைக்கிறது. மக்களுக்கான திட்டத்தை மக்களின் விருப்பப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு வல்லுனர் குழு அளித்திருக்கும் பரிந்துரை வரவேற்கத்தக்கதாகும்.
அதனைத் தொடர்ந்து ஊரக வேலை உறுதி திட்டத்தின் இப்போதைய விதிகளின்படி, கிராம ஊராட்சிகள் மத்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ள பணிகளை செய்யும் முகவர்களாகவே செயல்படுகிறார்கள். ஆனால் இந்த திட்டம் உள்ளூர் மயமாக்கப்பட்டால் மக்களுக்கு தேவைப்படும் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும். இதனையடுத்து மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ய கனவை நிறைவேற்றுவதற்கு இது பெரு உதவியாக இருக்கும். எனவே வேளாண்மை உள்ளிட்ட பிற பணிகளுக்கும் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை பயன்படுத்தி கொள்வதற்கு வசதியாக அந்த திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்ற வல்லுநர் குழு பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பொது மக்களுக்கும் சமூகத்திற்கு நன்மைகள் கிடைப்பதை மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.