நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக இணை நோயுடைய முதியவர்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 10-இல் 8 குழந்தைகள் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காற்று மாசு குறித்து குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங்க் கானூங்கோ டெல்லி தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் குழந்தைகள் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனை அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது. காற்று மாசு சீரான நிலையை அடையும் வரை குழந்தைகளின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.