வாடகை செலுத்தாத கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புறத்தில் 1587 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து வியாபாரிகள் பல கட்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டும் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும் வாடகையை முழுமையாக செலுத்தவில்லை. இதனை தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை ரூபாய் 40 கோடி செலுத்தாததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 757 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
அதன் பின் உரிமையாளர் சிலர் மட்டும் முழு தொகையையும் ஒரு சிலர் பாதி தொகையையும் செலுத்தியுள்ளனர். இதனால் அவர்களுடைய கடைகளுக்கு மட்டும் சீல்கள் அகற்ற பட்டுள்ளது. பின்னர் வாடகை செலுத்தாமல் இருந்த கடைகளுக்கு நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வாடகை செலுத்துவதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்கள் இன்றுவரையும் வாடகை தொகையை செலுத்தவில்லை. இதனால் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின்பேரில் வாடகை செலுத்தாத 15 கடைகளுக்கு பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடைகளின் முன்புறம் நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் நோட்டீஸ் ஒட்ட வந்த அதிகாரிகளுடன் சில வியாபாரிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் பேசியதாவது “மார்க்கெட்டில் உள்ள கடைகளின் மூலம் இதுவரை ரூபாய் 19 கோடி வசூல் ஆகி இருக்கிறது. நகராட்சி சார்பில் மின் கட்டணம் மட்டுமே ரூபாய் 10 கோடிக்கு மேல் பாக்கி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே வாடகை நிலுவையை வசூலித்தால் தான் நகராட்சி நிர்வாகப் பணிகளை விரைந்து செயல்படுத்த முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.