டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்றது.
அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த 23ம் தேதி சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் பட்ஜெட் தொடரின் 2-வது கூட்டம் இன்று காலை தொடங்க இருந்த நிலையில் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மக்களவையில் 2வது கூட்டம் தொடங்கிய நிலையில், கூட்டத்தொடரில் டெல்லி கலவரம் பற்றி உடனே விவாதிக்குமாறு குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து நிலைமை சீரானவுடன் விவாதிக்கலாம் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்தார். பின்னர் அமைச்சருடன் பேசி விவாதத்துக்கான தேதியை கூறுவதாக வெங்கையா நாயுடு பதில் கூறி மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
Congress MP's show placards & raise slogans in Lok Sabha demanding resignation of Home Minister Amit Shah over #DelhiViolence. pic.twitter.com/VGY72RCNHl
— ANI (@ANI) March 2, 2020
அதன்பின் பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போது அவைத்தலைவர் ஓம் பிர்லா முன் சென்று காங்கிரஸ் எம்.பி.க்கள் பதாகைகளுடனும், கொடியுடனும் சென்று அமித் ஷாவை ராஜினாமா செய்யக் கோரி கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த பாஜக எம்.பி.க்கள் காங்கிரஸ் எம்.பி.க்களை நோக்கி வேகமாக வந்தனர். இரு தரப்பினரும் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அவை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் நிலவியதால், நாள் முழுவதும் மக்களவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஒம் பிர்லா அறிவித்தார்.
இதேபோல மாநிலங்களவையில் அலுவல்கள் தொடங்கியதும் டெல்லி வன்முறை தொடர்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி எம்.பி.க்கள் தனித்தனியாக கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் நீடித்ததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.