Categories
Uncategorized தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் உயிரிழந்த அங்கித் ஷர்மா குடும்பத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் ரூ.1 கோடி இழப்பீடு!

டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் குடும்பத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் அரசு ரூ .1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கிடையே கடந்த வாரம் நடந்த மோதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது. போராட்டத்தில் நடந்த மோதல் கலவரமாகி, பொதுச் சொத்துகள், தனியார் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. அதேபோல வீடுகள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், துணை ராணுவப் படையினர் களத்தில் இறங்கியதையடுத்து கலவரம் கட்டுக்குள் வந்தது.

வன்முறையில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை தொடர்பான வழக்குகளை, இரண்டு சிறப்பு புலனாய்வு குழுக்கள் விசாரணை செய்து வருகின்றன. இதுதொடர்பாக 903 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 41 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் 40 கொலை வழக்குகளாகும்.

இதற்கிடையே டெல்லியில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் இன்று பார்வையிட்டார். கலவரத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஷிவ விஹார், காராவால் நகர், ஜாப்ராபாத், மஜ்பூர், பாபர்பூர், சாந்த் பாக், ஷிவ் விஹார், பைஜான்பூரா, யமுனா விஹார், முஷ்தபாபாத் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டார்.

இந்த நிலையில் டெல்லி வன்முறையில் உயிரிழந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் அங்கித் ஷர்மாவின் குடும்பத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரூ .1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கு டெல்லி அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்துள்ளோம் என்று கெஜ்ரிவால் இன்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |