Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கும் 3வது முறையாக தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை மறு உத்தரவு வரும்வரை நிறுத்திவைத்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை பிறப்பித்தது.

ஆனால் இருமுறையும் குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்ததால் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதியின்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் 3வது டெத் வாரண்ட் பிறப்பித்தது. இதற்கிடையே குற்றவாளி அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா இருவரும் தங்கள் தரப்பு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தங்களின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், டெத் வாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

டெல்லி நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் ஆஜரானார். அப்போது நீதிபதி தர்மேந்திர ராணா, மனுதாரர்கள் மனுவை தள்ளுபடி செய்வதாகவும், தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனவும் அறிவித்தார். அப்போது வழக்கறிஞர் ஏ.பி.சிங், பவன் குமார் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்திருக்கிறோம்.

ஆதலால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகமும், குற்றவாளி பவன் குமார் குப்தா கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளதை உறுதி செய்தது. இந்த வாதத்தை தொடர்ந்து பேசிய நீதிபதி தர்மேந்திர ராணா, நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள், தவறான நகர்வு இருந்தால் விளைவு மோசமானதாக இருக்கும் என மனுதாரர் வழக்கறிஞர் ஏ.பி.சிங்கை கண்டித்தார்.

மேலும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு பரிசீலனையில் இருப்பதால் தூக்கு தண்டனையை நாளை நிறைவேற்ற முடியாது. ஆதலால் மறு உத்தரவு வரும் வரை தூக்கு தணடனையை நிறுத்தி வைக்கிறேன் என நீதிபதி உத்தரவிட்டார். இதனால் 3வது முறையாக தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |