அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, இந்த விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டியின் போது அம்மாவின் ஆட்சியில் 10 வருடங்களில் நிறைவேற்றாததை ஒன்றரை வருடங்களில் நிறைவேற்றியதாக கூறி மார்தட்டியுள்ளார். அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதையே இந்த ஆட்சியாளர்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதிமுக ஆட்சியின் போது நடைபெற்று வந்த பணிகளில் ஒரு சில பணிகளை மட்டுமே செய்து முடித்துவிட்டு ஊரில் கல்யாணம் மாரில் சந்தனம் என்ற வகையில் நெஞ்சை நிமிர்த்திக் கொள்வது கேலிக்குரிய விஷயமாகும்.
5 வருடங்கள் சென்னையில் மேயராகவும் 5 வருடங்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த முதல்வர் ஸ்டாலின் சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவோம் என்ற அலங்கார வார்த்தைகளால் அபிஷேகம் செய்தார். சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் கட்டமைப்புகளை உருவாக்கி, வெல்லம் தேங்காத நிலையை ஏற்படுத்தி இருந்தால் எங்களுடைய பத்து வருட ஆட்சிக்காலத்தில் நாங்கள் எதுவுமே செய்திருக்க வேண்டியதில்லை.
ஆனால் 5 வருடம் மேயர் மற்றும் 5 வருடம் உள்ளாட்சி பதிவுகளில் இருந்தபோது ஸ்டாலின் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இதனால்தான் அம்மாவின் அரசு கடந்த 10 வருடங்களில் பல்வேறு விதமான திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் தண்ணீரில் தத்தளிக்கிறார்கள்.
மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக முடிக்காதது தான் இதற்கு காரணம். இன்னும் மழை மற்றும் புயல், சீற்றம் போன்றவைகளுக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்கள் இனியும் இந்த ஏமாற்றுக்கார அரசை நம்பாமல் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிப்பதோடு தங்களுடைய குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, பாதையை கடக்கும் போது மின்சார கேபிள்கள் ஏதும் இருக்கிறதா பள்ளம் கிடைக்கிறதா போன்றவற்றை கவனத்தோடு பார்த்து செல்ல வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
திமுக அரசு ஆட்சியில் அமர்ந்து 18 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இனி எதற்கெடுத்தாலும் அதிமுகவை குறை சொல்லாமல், அம்மாவின் அரசின் மீது குற்றம் சொல்லி பிரச்சனைகளை திசை திருப்பாமல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை காக்க வேண்டிய அனைத்து கடமைகளும் இந்த விடியா அரசுக்கு இருப்பதால் அதற்கான நடைமுறைகளை எடுக்க வேண்டும் என்று இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் வருங்காலத்திலும் பிரச்சினைகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"2 நாள் மழைக்கே இற்றுப் போன தமிழகம், வாய்ச்சொல் வீரர்களால் அல்லலுறும் மக்கள்!"
கையாலாகாத விடியா திமுக அரசுக்கு மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள் கடும் கண்டனம்.#TNRains #chennairains pic.twitter.com/PIu7H8kwq8
— AIADMK (@AIADMKOfficial) November 2, 2022