திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு கன்னிவாடியில் இருந்து அரசு பேருந்து கடந்த 31- ஆம் தேதி வந்தது. இந்நிலையில் உரிய நடைமேடையில் பேருந்தை நிறுத்துவதற்காக ஓட்டுநர் வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது கண்டக்டர் மாணவர்களை விலகி நிற்குமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் தாக்குதல் நடத்திய மாணவர்கள் மதுரை, திண்டுக்கல், தேனியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதில் இரண்டு மாணவர்கள் அரசு தங்கும் விடுதியில் தங்காமல் வெளியிடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதும் உறுதியானது.
இதனை அடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்து இளம் சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அவர்களிடம் நீதி குழும தலைவர் பிரியா விசாரணை நடத்தி வெளியூர்களிலிருந்து வந்து படித்தாலும் தனியார் விடுதி மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி படிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அரசு தங்கும் விடுதிகளில் வசிக்க அனுமதி பெற்ற ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு மாணவர்கள் படிப்பை தொடரலாம் எனவும், இது போன்ற சம்பவங்களில் இனி ஈடுபடக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.