ரூபாய் 82 ஆயிரத்து மோசடி செய்த மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் திருவானைக்காவல் பகுதியில் வசந்தவேலு என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் whatsapp மற்றும் telegram வாயிலாக பதிவு ஒன்று வந்துள்ளது. இதனை வசந்த வேலுவும் திறந்து பார்த்துள்ளார். இதனை அடுத்து மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு ரூபாய் 1600 முதலீடு செய்தால் 600 லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி வசந்த வேலு ஆன்லைன் மூலம் மர்ம நபருக்கு பணத்தை செலுத்தியுள்ளார். அதன் பின் வசந்த வேலுவுக்கு ரூபாய் 2200 கிடைத்துள்ளது. இதனால் வசந்த வேலு மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.
இந்த நிலையில் மூன்று நாட்கள் கழித்து அவரிடம் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் ரூபாய் 82 ஆயிரம் செலுத்தும் படி கூறியுள்ளார். ஏற்கனவே செலுத்திய பணத்திற்கு ரூபாய் 600 லாபம் கிடைத்ததால் வசந்தவேலு எதையும் யோசிக்காமல் ரூ.82 ஆயிரத்தை செலுத்த முடிவு செய்துள்ளார். அதன் பின் அவர் ஆன்லைன் மூலம் மர்மநபருக்கு பணத்தையும் செலுத்தியுள்ளார். செலுத்திய பணம் திரும்ப கிடைக்காததால் சந்தேகம் அடைந்த வசந்த வேலு காவல் நிலையத்தை நாடியுள்ளார். அங்க அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து ரூபாய் 82000ஐ மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.